புத்தக மதிப்புரை-Book Review

புத்தக மதிப்புரை-Book Review அகம் படிப்பதை படம் பிடித்து பகிர்ந்துடும் முயற்சி இது

Shout out to my newest followers! Excited to have you onboard!Thenmozhi Anbazhagan, Anuradha Gangadharan, Sathya Shanmug...
02/02/2026

Shout out to my newest followers! Excited to have you onboard!

Thenmozhi Anbazhagan, Anuradha Gangadharan, Sathya Shanmugaiah, Srinivasan Yuvasri, Muthukrishnan Baskaran Jayakumar, Govindsamy Kathirvel, Ravichandran, Vasanthadheepan, Raja Rdr, Thamarai Kannan Thamarai, ச. முகிலன், கவிஞர் ப சிவகுமார் எழுத்தாளர், நெடுமுடி வேந்தன்

"எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0" எனது பார்வையில் ***************************************************************************வ...
31/01/2026

"எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0" எனது பார்வையில்
***************************************************************************

வாழ்க்கையில் நமது துன்பங்களுக்கு எல்லாம் காரணம் என்னவென்று கேட்டால், உணர்வு ரீதியாக நம்மை நாமே சிறைப்படுத்தி கொள்வது தான். இந்தப் புத்தகம் அந்த உணர்வை அப்படி கையாளலாம். எங்கு எல்லாம் கையாள வேண்டும் என்று உதாரணத்தோடு விளக்கி உள்ளார் ஆசிரியர்.

ஒருத்தரிடம் அன்பு செய்து விட்டால், அவர் சொல்வதற்கு எல்லாம் நாம் "சரியென்று" தலையாட்டி விட நேரிடுகிறது. அதுவே பிறகு அழுத்தமாகி அந்த உறவு முறிவுக்கு காரணமாகிறது. இந்த நேரத்தில் அன்பு வேறு, வேலை வேறு, மரியாதை வேறு என்பதை அறிந்து பக்குவப் படுத்தி கொண்டால் போதும். இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் "கேட்ட வேண்டியதை அப்போப்போ கேட்டு விட வேண்டும்" என்பதை இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது.

பல சமயங்களில் சிலர் பிரிந்து விட்டாலோ, நமக்கு பிறர் துரோகம் செய்தாலோ உணர்ச்சி பீறிடல் காரணமாக மற்றவர்களை காயப்படுத்துவதோடு, சிலர் தன்னை தானே காயப்படுத்தி கொள்வார்கள்.

இந்தப் புத்தகம் சொல்ல வந்த செய்தி ஒன்றே ஒன்று தான் உணர்வு மற்றும் அறிவு. உணர்வு பிரகாசித்தால், அறிவு மங்கி விடும். அறிவு பிரகாசித்தால், உணர்வு மங்கி விடும். எதையும் நிதானமாக அறிவு பூர்வமாக அணுக வேண்டும்

நாம் உணர்வுரீதியாக ஒருத்தரோடு எப்படி எல்லாம் அகப்பட்டு கொள்கிறோம். அந்த செயல் நமக்கு நாமே குழி தோண்டி கொள்வது போல மாறிவிடுகிறது. விஜய் நடித்த துப்பாக்கி பட இறுதிக்காட்சியில் இருந்து தான் புத்தகம் ஆரம்பமாகிறது. இதற்கும் இந்தப் புத்தகத்திற்கும் என்ன சம்மந்தம் என்ற ஆர்வம் மேலிட வாசிக்கும் போது, புத்தகம் வேகம் எடுக்கிறது. எந்த கோணத்தில் ஆசிரியர் பார்க்கிறார் என்பது விளங்குகிறது.

ஒரு நேர்மையான அதிகாரியின் மூலமாக காரியம் சாதித்து கொண்டதாகட்டும், நாய் மாடியிலிருந்து விழுந்ததாகட்டும், எழுத்தாளர் உடல்நலன் பேணாமல் இறந்து போனதாகட்டும், காக்கா ஏன் வடையை நரியிடம் பறிகொடுத்தது என்ற விளக்கமாகட்டும் என்று 222 பக்கங்களும் நிறைவை தருகிறது.

நாம் நமது சொந்த உறவுகளாக இருந்தால் பொறுத்து போகிறோம் அல்லது மன்னித்து விடுகிறோம். அதையே வெளியிடம் என்று வந்துவிட்டால் தைய்ய தக்காவென்று குதிக்கிறோம். அதே நேரம் ஒரு வெளிநாட்டு பெண்மணி தன் கணவன் மற்றும் மகன் கொல்லப்பட்ட பிறகும், குற்றவாளியை மன்னித்து விட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டதையும் குறிப்பிடுகிறார்.

இது போன்ற புத்தகங்கள் பெரும்பாலும் கடினமான மொழியிலேயே இருந்திடும். ஆனால் இந்தப் புத்தகம் மிக எளிய மொழியில், எளிதாக புரிந்து கொள்ள கூடிய நடையில் இருக்கிறது.

எந்த வயது உள்ளவர்களும் படித்தால் இந்தப் புத்தகம் ஒரு கண் திறப்பு தான். இருந்தாலும் இந்தப் புத்தகத்தை இளம் தலைமுறைக்கு பரிந்துரைக்கிறேன்.

சிவமணி

"ஆலாபனை" கவிதை தொகுப்பு ********************************(சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் கவிதை  நூல்)ஆசிரியர்: கவிக்...
18/01/2026

"ஆலாபனை" கவிதை தொகுப்பு ********************************
(சாகித்திய அகாடமி விருது பெற்ற முதல் கவிதை நூல்)
ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரஹ்மான்
பதிப்பகம்: நேஷனல் பப்ளீஷர்ஸ்
விலை:100 ரூபாய்

ஆலாபனை என்னும் நூல் கவிஞர் அப்துல் ரகுமானால் பாக்யா இதழில் எழுதப்பட்ட 42 வசன கவிதைகளின் தொகுப்பு ஆகும். 1995 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நூலிற்கு 1999 ஆம் ஆண்டில் தமிழ்மொழிக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. கவிதை நூலுக்கு முதன் முதலாக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது இந் நூலுக்கு தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கவிதைகள் என்றாலே கற்பனை, பொய் என்ற கருத்தைப் பலரும் முன்வைத்து இருந்ததைப் பார்த்து இருக்கிறோம். ஆனால் கவிதைகள் எப்போதும் பொய் சொல்வதில்லை. வார்த்தைகளின் அழகில் அதன் நிறம் மாறி இன்னும் அழகாய் தோன்றுவதால் உண்மைக்கு புறம்பாக இருப்பது போல மாயையை ஏற்படுத்தலாம். கவிதைகள் நிஜத்தை மட்டுமே பேசும். எல்லா உணர்வுகளையும் பேசி இருக்கிறது ஆலோபனை. கவிதைகள் கூட கண்ணீரை வரவழைத்திடுமா? என்றால் ஆம் என்று சொல்ல வைத்தது ஆலாபனை.

கவிக்கோ அவர்களுக்கு இந்தப் புத்தகம் எப்படி சாகித்திய அகாடமி விருது பெற்று தந்தது என்று தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த கவிதைகளை சுவையுங்கள். அதன் காரணம் தெரியும்.
*************************************************
பெண் என்பவள் யார்? அவளை எப்படி நடத்துகிறோம்? அவளை இந்த சமூகம் எங்கு நிறுத்தி இருக்கிறது என்று பட்டிமன்றம் எல்லாம் நடத்திட வேண்டாம். இந்த ஒரு கவிதை போதும். இந்த கவிதை 100 வருடங்களுக்கு முன்னாடி வந்திருக்கும் என்று நினைத்து கொள்ள வேண்டும். இருபது வருடத்திற்கு முன்பு தான் எழுதி இருக்கிறார் கவிஞர்.

"எங்களைப் பெறுகிறவள் நீ
எங்களால் இழப்பவளும் நீ
நீ எங்கள் கண்ணாக இருக்கிறாய்

நாம் உன் கண்ணீராக இருந்தோம்
நீ எங்கள் ஆடையாக இருந்தாய்
நாம் உன் நிர்வாணமாக இருந்தோம்"

"அவதாரங்களையும், தீர்க்கதரிசிகளையும்
பெறுகிறவள் நீ
நாமோ உன்னைப்
பாவங்களின் பிறப்பிடம் என்றோம்"

இப்படியொரு நீண்ட கவிதையை வாசித்த பின்பு நான் என்னையே ஒரு முறை துப்பி கொண்டேன். பெண் என்பவள் பெருஞ்சக்தி என்றாலும், அது உதட்டோடு நின்று போகிறது என்ற கசப்பான உண்மையும் வந்து நின்று என்னைப் பார்த்து சிரித்து கொண்டிருந்தது.
**************************************************
"பற்று வரவு" கவிதையில் ஒரு மனிதன் பிறந்து, இறக்கும் வரையில் பூமியில் அனைத்தையும் அனுபவித்து விட்டு, இந்தத் தரணிக்கு ஏதும் செய்யாமலே சென்று விடுகிறான். வாழ்ந்த தடயம் எதுவுமே இல்லாமல் வாழ்வதா? வாழ்க்கை. அதை குற்றவாளி தான் செய்வான் என்று முடிகிறது கவிதை. தொண்ணூறு சதவீதம் வாழ்க்கை அப்படி தானே முடித்து கொள்ள ஆசைப் படுகிறார்கள்.

"என்னுடையது என்று
நீ உரிமை கொண்டாடும் எதுவும்
உன்னுடையது அல்ல"

இந்த மூன்று வரிகளை விரித்து ஆராய்ந்து பார்க்க விடாமல் , கவிதையில் அதற்கான விடைகளை தந்து இருக்கிறார். வாசித்து முடித்ததும், எதுவுமே என்னுடையது அல்ல என்று சொல்ல வைக்கிறார். வாசித்த பின்பு எது அசைப் போட வைக்கிறதோ அதுவே சிறந்த எழுத்து.
************************************************
"கொடுக்கல்" என்ற கவிதையும் "பற்று வரவு" கவிதையின் வேறு வடிவம். ஆனால் பொருள் ஒன்றே.

"கொடுக்கிறேன் என்று நினைப்பவனே
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

உனக்கு கொடுக்க பட்டதெல்லாம்
உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாக கொடுக்கப்படுகிறது"

இருப்பதை கொடு கொடு என்று சொல்லி நிறைவடைகிறது கவிதை. கொடுப்பதில் தான் சுகம் அதிகம். பெறுவதில் அல்ல என்பதை நான் அறிந்து கொண்டேன்.
***************************************************
"தற்கொலை செய்" என்ற கவிதையில் "நான், நான்" என்று சொல்லி கொண்டு திரியாதே! சுயநலமாய் இருக்காதே! ஒரு கவிஞனின் கோபம் இதை விட எப்படி வெளிப்படுத்துவது. இதோ குமுறுகிறார்.

"சுயநலம் என்பது
சுய இன்பம் போன்று
அருவருப்பானது என்பதை
நீ அறிந்து கொள்ள மாட்டாயா?"
**************************************************
"இழந்தவர்கள்" என்ற கவிதையில் மனிதன் எப்படி வாழ்கிறான்?எதை எல்லாம் உற்று நோக்குகிறான் என்று இன்றைய வாழ்வியலில் மனிதனின் செயல்பாடுகள் குறித்து பேசுகிறது கவிதை. மனிதன் எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும் என்று நினைத்து எதையுமே ரசிக்காமலே மாண்டு விடுகிறான். ஏன் வாழ தவறி விடுகிறான் என்ற கேள்வியை கேட்டு கொள்ளாமலே கண்ணை மூடி விடுகிறான் என்பதை உரக்க சொல்கிறது இந்தக் கவிதை.

"ஓடிக்கொண்டிருப்பவனே! நில்
எங்கே ஓடுகிறாய்?
எதற்காக ஓடுகிறாய்?

வாழ்க்கையைப் பிடிக்க ஓடினாய்?
ஆனால் உன்
கண் மூடிய ஓட்டத்தில்
அதைப் பார்க்காமலே ஓடுகிறாய்”

“வாழ்க்கை ஒரு திருவிழா
நீயோ அதைக் கொண்டாடுவதே இல்லை
கூட்டத்தில் தொலைந்து போகிறாய்"

இது எத்தகைய நிதர்சனமான உண்மை. நாம் ஓடிய வருடங்களை திரும்பி பார்த்தால், நம்மைச் சார்ந்தவர்கள் அடுத்த நிலைக்கு செல்ல உதவி இருப்போம். நாம் வாழ்ந்தோமா? தொலைந்தோமா? என்றால் வாழவில்லை என்று பெரும்பாலும் சொல்ல கேள்விப்பட்டு இருப்போம். இனியாவது வாழ்க்கை ஒரு திருவிழா என்பதை உணர்ந்து வாழ்ந்திடுவோம்.

கவிதை என்பது மிடறு மிடறாய் சுவைப்பது. கதைப் போல விழுங்குவது அல்ல. ஆலாபனை எல்லா சுவைகளையும், நவரசங்களையும் கொட்டி இருக்கிறது. கண்டிப்பாக வாசியுங்கள். விழித்திருங்கள்.

சிவமணி

"ஓஷோவின் விழிப்புணர்வு கதைகள்" எனது பார்வையில்×××÷×××××××××××××××××××××××××ஆசிரியர்: ஓஷோபக்கங்கள்:276ஓஷோனிக் என்றால் கடல...
23/12/2025

"ஓஷோவின் விழிப்புணர்வு கதைகள்" எனது பார்வையில்
×××÷×××××××××××××××××××××××××
ஆசிரியர்: ஓஷோ
பக்கங்கள்:276

ஓஷோனிக் என்றால் கடலில் கரைந்து விடும் அனுபவம் என்று பொருள். அப்போது அதை அனுபவிப்பவர் எங்கே? அதற்கு தான் நாம் ஓஷோ என்று கூறுகிறோம். ஆனால் "மலர் தூவி வாழ்த்து ஒரு ஆசரிக்கப்பட்டவர்" என்ற அர்த்தத்தில் ஓசோ என்ற வார்த்தை கிழக்கு நாடுகளில் முற்காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பின்னர் ஓசோ கண்டறிகிறார்.

இந்தப் புத்தகத்தில் 44 கதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறது. ஜூன், சூபி மற்றும் புத்த மத போதனைகளை சாரத்தை தந்து செல்கிறது.

இந்தக் கதைகளின் சூழல், இடம், மனிதர்கள் என்று மாறினாலும், அதன் கருப்பொருள் ஒன்று தான். இந்த உலகத்தில் அனைத்தும் மாயை. உள்ளே கட. இயல்பாய் இரு என்பதை வெவ்வேறு கதைகள் வாயிலாக சொல்லி இருக்கிறார். எந்த உயரத்தில் இருந்தாலும் உணர்வு நிலையில் எடுத்திடும் முடிவுகள் உன்னதமாகிறது என்பதைப் புலப்படுத்துகிறார்.

தியானம் என்பது செய்யப்படுவதல்ல. அது ஒரு செயல்ல. எந்த செய்தாலும் தியானத்தில் இருக்கலாம். ஆனால் அதை செய்ய முடியாது. அது ஒரு நிலை என்று ஆரம்பமாகிறது. பேரரசர் வூ வுக்கும், போதி நர்மருக்கும் நடந்திடும் உரையாடல்களும், போதி தர்மர் தனக்கான சீடனைத் தேர்வு செய்வதும் இந்தப் புத்தகம் என்ன சொல்ல வருகிறது என்பதை உணர முடிந்தது.

போதி தர்மர் “நீ உன்னுடைய சொந்த குரலை கேட்கத் தொடங்கும் வரை உனக்கு யாரும் உதவ முடியாது” என்று சொல்வார். நாம் தான் நம்முடைய கேட்பதில்லைநே என்றே தோன்றியது.

புத்தர் மற்றும் அங்குலிமால் இருவருக்கும் நடந்திடும் சம்பாஷனையில், புத்தர் சொல்வார் “நான் நகர்வதை நிறுத்தி 30 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் உனக்கு ஏகப்பட்ட ஆசைகள் மற்றும் எண்ணங்களோடு நகர்ந்து கொண்டிருக்கிறாய்.ஆதலால் நீதான் நிறுத்த வேண்டும், நானல்ல”. இது எண்ணங்கற்ற நிலையைப் பறைசாற்றுகிறது.

மேலும் நான் ரசித்த வரிகள் இங்கே பதிவு செய்கிறேன்.

“நீ உன்னை சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய் நீ சாகும்போது உந்தன் வர முடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக் கொண்டு செல்கிறாய் உன்னிடமிருந்து எடுத்துக் கொள்ளக்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளப்படுத்திக் கொள்கிறாய்”

“உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்பொழுது நீ மற்றவருக்காக உன்னை தியாகம் செய்யும் பொழுது அது அன்பு.
நீ வழியாகவும், மற்றவர்கள் குறிக்கோளாகும் ஆகும்போது அது அன்பு.
நீ குறிக்கோள்களாகவும், மற்றவர்கள் வழியாகும் போது அது காம இச்சை.
காம இச்சை தந்திரமானது அன்பு எப்பொழுதும் கருணைமயமானது”

“நான் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் இன்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம்”

வாழ்வில் எவ்வளவு விசயங்களை நாம் சுமந்து கொண்டு, எது வாழ்வு என்பதறியாது வாழ்கிறோம் என்பதை ஆங்காங்கே சில கேள்விகள் கேட்டு வாசிப்பவர்களைச் சிந்திக்க வைத்து இருக்கிறது இந்தப் புத்தகம்.

சிவமணி

"தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" எனது பார்வையில் **************************************************நூல்: சிறுகதை தொகுப்...
02/12/2025

"தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" எனது பார்வையில்
**************************************************
நூல்: சிறுகதை தொகுப்பு
விலை: 200 ரூ
ஆசிரியர்: மாரி செல்வராஜ்
பதிப்பகம்: வம்சி

இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முதல் புத்தகம் தான் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்". சி. கல்யாணி, இயக்குனர் ராம் அவர்களின் வாழ்த்துரையில் இருந்து இந்தப் புத்தகம் சுவாரசியத்தை தருகிறது. இருபத்தியொரு சிறுகதைகள் தாங்கி வந்திருக்கிறது. கருணை, நேசம், பாசம், காதல், நன்றி, துரோகம், அரசியல், சண்டை, காமம் என்று எல்லா வகையான உணர்வுகளையும் கலந்து வந்திருக்கிறது.

உளியை எப்போதும் சுமந்து கொண்டு திரிபவன் என்றாவது ஒரு நாள் சிற்பத்தைச் செதுக்கி விடுவான் என்பது போல, உணர்வுகளை சுவாசிப்பவன் ஒரு படைப்பாளியாக ஆகியே தீருவான். மண் சார்ந்த கதைக்களமும், சந்தித்த எதார்த்த வாழ்வியலையும் பதிவு செய்யும் போது, கேசரியில் கூடுதலாய் முந்திரி, திராட்சையை போட்டால் எப்படி சுவை கூடுமோ? அப்படி தான் வாசிக்கும் போது இருந்தது.

மனிதர்களின் அகத்திலிருக்கும் நேர்மறை/எதிர்மறைகளை வடிகட்டாமல் தந்திடும் போது, சில கதைகளை கடந்து போக முடியாமல் அங்கேயே நிற்க வேண்டி இருக்கிறது. அந்த இடத்திலிருந்து தான் வாசித்தல் போதையை தருகிறது.

'அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்' கதையில் "இனி நான் வாலை ஆட்டவில்லை மற்றும் ஆட்டப்போவதுமில்லை" என்று வளர்ப்பு நாய் பேசுகிறது.

'எனக்கு ரயில் பிடிக்காது' கதையில் தண்டவாளங்களுக்கு நடுவில் காய்ந்தும், காயாமலும் கிடக்கும் மாட்டு சாணங்களை பார்த்திருப்பீர்களா?. சத்தியமாய் பார்க்காமல் மிதித்து சீ என்று காலை தன உதறி இருப்பீர்கள்" என்ற அறிமுகத்தோடு ஆரம்பமாகும் கதை உணர்வுகளின் உச்சம்.
'அடுக்கு மல்லி' கதையில் வாசிக்கப்படாத சிவப்பு காதல் ஸ்டாலினுக்கும், பத்மாவுக்கும் இடையில். யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை என்று வாழ்ந்திடும் பத்மா கிடைக்காமல் போனதில் ஸ்டாலின் போலவே நானும் துர்திஷ்டசாலி தான்.

"தட்டான் பூச்சிகளின் வீடு" கதையில் உயிரை உயிராய் பாவிக்கும் மனிதம் சுமந்திடும் பால்ய வயதின் ஞானத்தை இதுவரை தேடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவனுக்கு பால்ய காலத்தின் நினைவுகள் நிழலாடியது. அதில் எத்தனையோ முகங்கள் எனது இருப்பை உறுதிப்படுத்தி சென்றது.

"மிச்சமிருக்கும் விஷம்" கதையில் "காமராசுவை எளிதில் பார்த்துவிட முடியும். ஆனால் கோமதியை அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. அவளை பார்ப்பதற்கு நீங்கள் கோவிலில் அதிக நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு மழை நாளில் தன்னை மறந்து நீங்கள் நனைவீர்கள் என்றால் அவளைப் பார்க்கலாம்." இப்படி கவித்துவம் நிறைந்த வரிகள் நெஞ்சை வருடி சென்றாலும், காமராசுவும், கோமதியும் காதலோடு காற்றில் கரைந்து போனதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்.

"தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" முகிலன் தான் நேசித்த கட்சி தலைவரை காண செல்லும் இடத்தில், எந்த லட்சியம், கொள்கை என்றில்லாமல் பிடிக்கும் என்பதற்காக கூட்டத்தில் கலந்து கொண்டு, காரணமே தெரியாமல் கலவரம் வந்திட அதில் தப்பி பிழைக்கும் அவனுக்கு, ஏன் சண்டையிட்டார் என்ற காரணமே புரியாமல் இருக்கும் அவலநிலையே இன்றைய அரசியலிலும் இருப்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

விஜியலட்சுமி, சுதா, செண்பகவள்ளி, சாந்தி, வசந்தி, ஜோ போன்ற பெண்களின் வாழ்வில் அவர்கள் சதைப்பிண்டமாகவே பார்க்க பட்டிருக்கிறார்கள்.
இந்தப் புத்தகம் வாசிக்கும் போது வித்தியாசமான
உணர்வை தந்தது. வாழ்த்துகள் மாரி செல்வராஜ் அவர்களே

இந்தப் புத்தகத்தை ஷார்ஜா புத்தக கண்காட்சியில் பரிந்துரைத்த டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் அண்ணன் வேடியப்பன் அவர்களுக்கு நன்றி

சிவமணி

“ஏறுவெயில்” புதினம் எனது பார்வையில்*************************************ஆசிரியர்: பெருமாள் முருகன்பதிப்பகம்: காலச்சுவடு ...
24/11/2025

“ஏறுவெயில்” புதினம் எனது பார்வையில்
*************************************

ஆசிரியர்: பெருமாள் முருகன்
பதிப்பகம்: காலச்சுவடு
விலை: 250 ரூ

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் முதல் நூல் இந்த நாவல். தனது இருபத்தைந்தாவது வயதில் இந்த நாவலை எழுதி இருப்பது இதன் சிறப்பு.

பொன்னையனுக்கு அப்பா, அம்மா, ஒரு அண்ணன், ஒரு அக்கா, சித்தப்பன், பெரியப்பன் மற்றும் தாத்தா, பாட்டி என உறவுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த கடைக்குட்டி. அப்பா, சித்தப்பா மற்றும் பெரியப்பா எல்லாரும் காலனிக்கு குடிபெயர்ந்து போகிறார்கள். தாத்தாவும், பாட்டியும் காட்டிலேயே ஒரு குடிசைப் போட்டு, உழைத்து வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு பெண் ஒரு எல்லைக்குள் தான் வாழ வேண்டும். அதைத் தாண்டி போக கூடாது என்று மிரட்டியும், கட்டிட வேலைக்கு செல்கிறாள் அக்கா. அங்கு சென்ற இடத்தில் காதலித்து வீட்டை விட்டு ஓட விட, வண்டி எடுத்து கொண்டு போய் மீட்டு வருகிறார்கள். நடைப்பிணமாக இருக்கும் இவளை இரண்டாம் தாரமாய் ஒருத்தனுக்கு கட்டி அனுப்பி விடுகிறார்கள். இந்தக் கதையிலும் அவளுக்கான எல்லை இது வரை தான்.

அதே நேரம் இடம் வாங்கி அதில் வீடு கட்டி விவசாயம் செய்யும் எண்ணத்தில் அப்பா இருக்கிறார். இடம் வாங்குகிறார். சிறிது நாட்களில் சோடா கடை வைத்து தர சொல்லி மூத்தவன் சண்டைக்கு வர, வாங்கிய இடத்தில் பாதியை விற்று கடை வைத்து தருகிறார் அப்பா. அண்ணன் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி கொண்டு, கடையை சரிவர நடத்தாமல் மதுவோடு பொழுதை கரைக்கிறான். இது தெரிந்தாலும் மகனுக்கு ஆதரவு கரம் நீட்டும் அம்மா.

நிலத்தை விற்ற பணத்தில், ஒரு பங்கு பொன்னையனை கல்லூரியில் சேர்க்க தருகிறார். மீதி பணத்தில் பைனான்ஸ் கடை நடத்தி, நல்ல வருமானம் பார்க்கிறார் அப்பா. வருமானம் அதிகமாக தலைக்கனம் அதிகமாகி அவரும் குடித்தே தீர்க்கிறார். அந்த சமயத்தில் வீடு தீப்பற்றி எரிந்திட, கையில் இருந்த பணமெல்லாம் தீக்கிரையாகிறது.

அமைச்சர் கந்தசாமியோடு சேர்ந்து கொண்டு, செவத்தான் காட்டை வாங்கி விற்க உதவுவது போல, இருந்து விவசாய நிலத்தை கை மாற்றி விடுகிறான். வீரன் என்பவன் தட்டி கேட்க கலவரம் உண்டாகிறது.

பொன்னையன் வீட்டில் வளரும் மணி என்கிற நாய் இந்த கலவரத்தில் திக்கென்று திரிகிறது. இறுதியில் இறந்து போகிறது.

பைனான்ஸ் நல்லபடியாக நடந்ததா? சோடா கடை என்ன ஆயிற்று? பொன்னையன் நன்றாக படித்தானா? என்பதே மீதிக்கதை. முதல் நாவல் என்பதாலோ என்னவோ நிறைய கதாபாத்திரங்கள் வந்து வந்து முற்று பெறாமல் போகிறது. பொன்னையன் இவர்களிடம் சிக்கி கொண்டு படும் மன உளைச்சல்கள், பொன்னையன் மீது பெரும் மதிப்பு வருகிறது.

புத்தகம் முழுவதும் இவன் என்ற சொல் பொன்னையனை குறிப்பிடும் படி எழுதி இருப்பது சிறப்பு.

கட்டிட வேலைக்காக விவசாயத்தை விட்டுச் சென்ற மக்களின் வாழ்க்கை சிக்கல்களையும், பாதிப்புகளையும் இந்த நாவல் பேசுகிறது. விவசாயம் ஒழிந்து போக, வேலை தேடி இடம் பெயர்ந்து செல்கிறார்கள். இதனை பயன் படுத்தி கொள்ளும் அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தால் நிலங்கள் பறிபோகிறது. இன்று எத்தனையோ தோப்புகள், கட்டிடங்களாக மாறி வருகிறதல்லவா?. அதனை அன்றே கணித்து எழுதி இருக்கிறார்.

கோவில் என்றால் பிரச்சனை, திருவிழா என்றால் பிரச்சனை என்று தொட்டதுக்கு எல்லாம் பிரச்சனை நடந்திடும் எதார்த்த வாழ்வியலின் பதிவு தான் இந்த ஏறுவெயில். பிரச்சனைகள் என்றும் ஏறுமுகம் தான் தீராது என்பதை சிறப்பாக பதிவு செய்து இருக்கிறார் ஆசிரியர்.

சிவமணி

“செம்மீன்” புதினம் எனது பார்வையில்************************************வெளியான ஆண்டு:1962சாகித்திய அகாடமி விருது பெற்ற நூ...
25/10/2025

“செம்மீன்” புதினம் எனது பார்வையில்
************************************

வெளியான ஆண்டு:1962
சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்

மலையாளத்தில்: தகழி சிவசங்கரப்பிள்ளை
தமிழாக்கம்: சுந்தர ராமசாமி

கேரளா மாநிலத்தின் கடற்கரையோரத்தில் வசிக்கக்கூடிய மீனவ சமுதாய மக்களின் இடையே உள்ள நம்பிக்கை பற்றியது. கடலன்னை சீற்றம் கொண்டால், அங்கு வாழும் ஏதோ பெண்ணின் நடத்தைச் சரியில்லை என்ற நம்பிக்கையைச் சுமந்து செல்கிறது புதினம். அதாவது மனைவி ஒருவர் இறைமறுப்பு கொண்டவராக இருந்தால் அவருடைய கணவன் கடலுக்குச் சென்றால் கடல் தெய்வம் அவரை விழுங்கிவிடும் என்பதை நம்புகிறார்கள்.

செம்பன்குஞ்சு என்பவர் ஒரு மீனவர். அவருக்கு சக்கி என்ற மனைவியும், கருத்தம்மா, பஞ்சமி என்ற மகள்களும் உள்ளனர். அங்குள்ள மீனவர்களின் மிகப் பெரிய லட்சியம், சொந்தமாக ஒரு படகும், மீன்பிடி வலையும் வாங்க வேண்டும் என்பதே. அந்த ஆசை செம்பன்குஞ்சுவுக்கும் உண்டு. இதனை ஒரு முஸ்லீம் மீன் மொத்தவியாபாரியின் மகனான பரீக்குட்டியின் உதவியுடன் நிறைவேற்றுகிறார். ஆனால் பரீக்குட்டி ஒரு நிபந்தனை விதிக்கிறார். கருத்தம்மாவிற்கும் பரீக்குட்டிக்கும் உள்ள காதலால் தான் அந்தப் பணத்தைக் கேட்டதும் தருகிறார்.

இதனைத் தெரிந்துகொண்ட கருத்தம்மாவின் தாய்
சக்கி, அவருடைய சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என எச்சரிக்கை செய்கிறார். கருத்தம்மா, பரீக்குட்டிக்காக தனது காதலை தியாகம் செய்கிறார்.

அதன் பின் பழனி என்ற ஆதரவற்றோரை திருமணம் செய்து வைக்கிறார் செம்பன்குஞ்சு. சென்பன்குஞ்சு மற்றுமொரு படகு, வலையை வாங்குகிறான். அதன்பின் பேராசைக்காரனாகவும், இதயமற்றவனாகவும் ஆகின்றான். அதோடு கடனாய் பெற்றுக்கொண்ட பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றுகிறார் செம்பன்குஞ்சு. அதே சமயத்தில் உடல் நலம் குன்றி சக்கி இறந்து போகிறாள்.

அதன் பிறகு பாப்பிகுஞ்சு என்றபெண்ணை மறுமணம் செய்கிறார் செம்பன்குஞ்சு. அதன் பிறகு சமூகம் எப்படி அவரைப் பார்த்தது. கருத்தம்மா, பழனியோடு நன்றாக இல்வாழ்க்கை நடத்தினாளா? பரீக்குட்டி என்ன ஆனான்? பஞ்சமியின் நிலை என்ன? போன்றவை தான் மீதிக்கதை.

கிட்டத்தட்ட 63 வருடங்கள் ஆகிவிட்டன. கடைசி 30 வருடத்தில் உலகம் 10 நூற்றாண்டுகளுக்கு இணையான வளர்ச்சி பெற்றாலும், இன்னும் சமுதாயம் பெண்ணைச் சுற்றிய மூடநம்பிக்கை வலைகளைப் பின்னியே வைத்திருக்கிறது. இன்னும் பெண்களும் கூட, சமுதாயம் தருகின்ற நெருக்கடியில் ஒரு அடி எடுத்து வைத்தால், இரண்டடி இறக்கி வைத்து விடுகிறது. எல்லாத் துறைகளிலும் பெண்கள் குறிப்பிட்ட சதவீதம் வளர்ச்சி அடைந்தாலும், வக்கிரங்கள் இன்னும் அதிகமாகி இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. அதற்கு வரதட்சணைக் கொடுமையில் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கையே அதற்கு சான்று. பெண்களின் வளர்ச்சி எறும்பூர கல்லும் தேயும் என்ற கணக்காவே இருக்கிறது.

இன்றும் கூட ஆண், பெண் சகஜமாக பேசி கொண்டாலும், அவர்களுக்கு அறியாமல் அவர்களைப் பற்றி தவறாகப் பேசிக் கூடிய சமூகமாகவே இன்னும் இருக்கிறது.

தகழி சிவசங்கரப்பிள்ளையின் எழுத்தில் அந்த ஆதங்கத்தைப் பார்க்க முடிந்தது. இறுதியில் அவர் முடித்த விதம், சமுதாயத்தில் இருக்கக் கூடிய கட்டுகளை உடைக்க விரும்பியதாக தெரிந்தது. ஒரு மனிதன் எவ்வாறு எல்லாம் நிறம் மாறுகிறான். அந்த மாற்றத்திற்க்கான காரணம் அனைத்தும் தனிமனித சுயநலமே என்பதையும் மறைமுக சொல்லி இருக்கிறார். சுந்தர ராமசாமி அவர்களின் தமிழாக்கம் தகழி சிவசங்கரப்பிள்ளையின் தாய்மொழி உணர்வை தமிழிலும் தந்து இருக்கிறார்.

சிவமணி

Address

Abu Dhabi
665

Telephone

+971502054789

Website

Alerts

Be the first to know and let us send you an email when புத்தக மதிப்புரை-Book Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to புத்தக மதிப்புரை-Book Review:

Share