03/04/2023
விடுதலை திரைப்படம் பாகம் ஒன்றை வைத்து திரைப்படத்தின் போக்கை முழுமையாக மதிப்பிட முடியவில்லையென்றாலும் பார்த்தவரை துருத்திக்கொண்டிருந்தவகளை அடையாளப்படுத்த முயற்சிக்கிறோம்.
ஜெயமோகனின் கதைக்கரு (துணைவன்) ஒடுக்குமுறைக்கு "எதிராக கிளர்ச்சியுற்று எழும் புரட்சியாளர்களும் ஆதிக்க வன்முறையாளர்கள் போலவே வன்முறைகளைப் பாரபட்சமின்றி கையிலெடுப்பவர்கள்தான்" என்கிற விமர்சனத்தை அதிகாரத்தின் படிநிலையில் கீழிருக்கும் ஒருவனைப் பயன்படுத்தி, அவனை எளியவனாக, அப்பாவியாக, சூழ்நிலைக் கைதியாக காண்பித்து அவனை வாசகர்களுடன் நெருக்கத்திற்குள்ளாக்கி வாசகர்களை குற்றவுணர்வுக்குள்ளாக்குவதும் மனிதாபிமானத்தை கேள்விக்குட்படுத்துவதும்
சற்று முரணகவே தோன்றுகிறது.
இது ஜெயமோகனின் "கைதிகள்" கதையிலும் நிகழ்ந்ததே.
ஆதிக்க அரச அதிகாரத்தினுள் இயங்குபவரை மையமாக வைத்து அவரைச் சூழ்நிலைக்கைதியாக்கி அவர் கண்வழியே ஜெயமோகன் உருவாக்கும் உலகை காட்சிப்படுத்துவது எழுத்தாளரின் குரல் ஏதோவொரு அதிகாரப் படிநிலையிலுள்ளவனாக தன்னைப் பாவித்துக் கொண்டு எழுதுவதாகத் தோன்றுகிறது. இது ஜெயமோகன் பொது வெளியில் பேசும் அரசியல் நிலைப்பாட்டுடன் பொருத்திப் பார்த்து அணுகும் போது தெளிவாகிறது.
வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தை பார்த்தால்,
ஒரு பக்கம் இயக்குனர் ரபீஃக் இயக்கிய "ரத்த சாட்சி" (ஜெயமோகனின் கைதிகள் கதை)திரைப்படத்தை தன் பாணியில் எடுக்க முனைந்திருப்பதாகத் தோன்றியது.
ரத்த சாட்சியில் வரும் இளங்கோ குமரவேலின் இடம் தான் விடுதலை திரைப்படத்தில் சூரியின் இடம்.
ரத்த சாட்சியில் இளங்கோ குமரவேல் தன் கண் முன் நிகழும் அத்தனை வன்முறைகளுக்கும் சாட்சியாக, சூழ்நிலைக்கைதியாக, அதிகாரத்திற்கு எதிராக ஒரு துரும்பைக்கூட நகர்த்த முடியாமல் உருக்குலைந்து கொண்டிருப்பார்.
அதாவது அநீதிக்குள்ளானவர்களில் தனக்கு வேண்டப்பட்டவர் என்று யாருமே இல்லாதவிடத்து சக மனிதனுக்கு நிகழும் அநீதியை கண்டு ஒருவன் குமுறும் இடம் ரத்த சாட்சியில் இயல்பாக உருப்பெற்றிருக்கும்.
அதே நேரம் விடுதலையில் சூரியின் காதலியாக மலைவாழ் சமூகத்தில் வாழும் பெண் இருப்பதானாலேயே அங்குள்ள அனைத்து சாமானியர்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற போக்கில் கதை சொல்லும் பாணி வழக்கமான தமிழ் சினிமா நாயக பிம்பத்தைக் கோருகிறது.
வெற்றிமாறனின் விடுதலை திரைப்படப் பாணி வழக்கமான தமிழ் சினிமா நாயகப் போக்கை மீட்டுருவாக்கம் செய்கிறதென்றால்,
ரபீஃக்கின் ரத்த சாட்சி மாற்று சினிமாப் பாதையை நோக்கி முன்னகர்கிறது.
கதாநாயகனுக்கு காதலி ஒருத்தி கிடைக்க வேண்டுமென்றால் நாயகி கண்ணுக்கு தெரியும் படி நல்லவனாக நடந்துகொள்ளல் அல்லது நாயகிக்கு நல்லது செய்து காதலியாக்குதல் புனைவில் தேய்ந்து போன மிகப்பழைய பாணி.
அதைத்தான் விடுதலை திரைப்படத்தில் வெற்றிமாறன் கையிலெடுத்திருக்கிறார்.
அங்குள்ள மலை வாழ் மக்களுக்குளிருந்து
சூரிக்கு இப்படி ஒரு காதல் உறவு கிடைக்கவில்லையென்றால் அவரது மனிதாபிமானம் எவ்வளவு தூரம் சீண்டப்படும் ? அவ்வாறு சீண்டப்படுவதற்கு எதிரான ஆவேசம் காதலிக்கு அநீதி நிகழ்வதால் என்றில்லாமல் எந்தப்பெண்ணுக்கு நிகழ்ந்தாலும் அவருக்குள்ளிருந்து வெடிக்குமா?
முக்கியமாக பெண்களுக்கு நிகழும் வன்முறைக்காட்சிகளைப் பட்டைதீட்டிக் காட்ட அதீத கரிசனமெடுத்திருக்கிறார் இயக்குனர். (ப்ரதீப் பாலு விடுதலை விமர்சனக் காணொளியில் குறிப்பிட்டிருப்பது போல) ஒரே சூழலில் ஒரே இடத்தில் பெண்கள் மீதான அதீதமான தொடர் வன்முறைக் காட்சிகளை திரும்பத் திரும்ப காட்சிப்படுத்தி திரைப்படத்திற்குள் அத்தகைய வன்முறைகளை சாதாரணமயப் படுத்தியிருக்கிறார்.
இது எத்தகைய இடத்திற்குள் செல்கின்றதென்றால்
1.அரச அதிகாரிகளின் வன்முறையின் வீரியத்தை காட்சிப்படுத்த,
2.விஜய் சேதுபதியின் பதில் வன்முறைகளை நியாயப்படுத்த,
3.சூரியின் ஆவேசம் நிறைந்த தீவிரத்தன்மையை நியாயப்படுத்தவென
பெண்ணின் நிர்வாணம், பெண்ணுடல் மீது நிகழும் அத்தனை வன்முறைகளையும் திரும்பத் திரும்ப நுணுக்கமாக காட்சிப்படுத்தி ஒருவிதமாக பார்வையாளர்களை Exploit செய்திருப்பதாக தோன்றியது.
இங்கு பெண்ணுடல் நிர்வாணம் S*xualized செய்யப்படவில்லை ஆனால் Sensationalized செய்யப்பட்டிருக்கிறது.
பெண்கள் மையக்கதாப்பத்திரமாக இல்லாத திரைப்படத்தில் அவர்களை வன்முறைகளுக்குப் பலியாக்கி ஆண் கதாநாயகர்களைதூக்கி காட்டுவது
மிகப்பழய ஆண்மைய சினிமாப் பாணி. (கேட்டால் ஜெயமோகனின் கதை பழையது என்று கூடச் சொல்வார்கள்) பின்னர் ஆண்களும் அம்மணமாக நடித்திருக்கிறார்களே என்றால், ஆண்கள் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தப்படுவதும் பெண்கள் நிர்வாணப்படுத்தி துன்படுத்தப்படுவதும் அவ்வளவு துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறதா ?
என்று கேட்டால் இல்லை.
கதையில் நிகழும் ஒவ்வொரு வன்முறையும், கதைத் திருப்பங்களுமே பெண்ணுடல் மீதான வன்முறையின் பின்னர்தான் நிகழ்ந்தேறுகிறது. அதிகாரத்திலுள்ளவர்கள்
எந்த ஆணையும் அம்மணமாக்கி அடித்துத் துன்புறுத்திய பின்னுமில்லாத அதிர்வு பெண்ணை அம்மணமாக்கிய பின் திரைப்படத்திற்குள் நிகழ்கிறதென்றால் இயக்குனர் புரிந்தே பெண்ணுடல் மீதான (தேவைக்கு அதிகமான)தொடர் வன்முறைகளை புகுத்தி பார்வையாளரை உணர்வுப்பூர்வமாக exploit செய்து தன் விருப்பத்திற்கு கையாள பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
இது திரைப்படத்திலிருந்த மிகப்பெரும் விமர்சனம்.
வழக்கம் போல டப்பிங் மிகப்பாரிய சொதப்பல். சூரி, சேத்தன், பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி சிறப்பாக நடித்துள்ளார்கள். முக்கியமாக சேத்தனின் நடிப்பு அட்டகாசம். பகுதி இரண்டு வரும்வரை பொறுத்திருந்து மீதியைத் தொடர்வோம்.
விடுதலை பாகம் 1 (2023) திரைப்படம் குறித்து பிரதீப் பாலுவின் விமர்சனக் காணொளி எங்கள் சேனலில்..
Link in first comment.