12/05/2026
*பத்திரிகை செய்தி 12.05.2026*
*நீட் தேர்வு வினாத்தாள் கசிவில் முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் — இந்திய மாணவர் சங்கம்*
நாட்டின் மிகப்பெரிய மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்திருப்பது மிகவும் கடுமையான தவறும், அதேசமயம் மிகுந்த அதிர்ச்சி மற்றும் கவலைக்குரிய ஒன்றுமாகும். இலட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கால நம்பிக்கையுடன் எழுதும் இந்த நுழைவுத் தேர்வில் ஏற்பட்டுள்ள வினாத்தாள் கசிவு, தேர்வை நடத்தும் மத்திய அரசு நிறுவனமான NTA மற்றும் மத்திய கல்வித்துறையின் முழுமையான நிர்வாக தோல்வியை வெளிப்படுத்துகிறது.
தேர்வுக்கு முன்பாக கோச்சிங் சென்டர்களின் குழுக்களில் பரவியிருந்த கணிப்பு வினாத்தாளும், உண்மையான வினாத்தாளும் பெரும்பாலான கேள்விகளில் ஒரே மாதிரியாக இருந்தது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கல்வியை வணிகமாக மாற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசின் கொள்கைகளும், கோச்சிங் சென்டர் மாஃபியாக்களுடன் இணைந்துள்ள கல்வி வணிக அரசியலும் இந்த முறைகேட்டின் பின்னணியில் இருப்பது தெளிவாகிறது.
ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குறிப்பாக இந்திய மாணவர் சங்கம் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடத்தி, நீட் தேர்வு சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவுகளை சிதைக்கும் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளின் வெளிப்படைத்தன்மை இதுபோன்ற சம்பவங்களால் முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. சாதாரண மற்றும் உழைக்கும் வர்க்க மாணவர்களின் கல்வி உரிமையை, கல்வி வணிகத்தின் மூலம் ஒன்றிய அரசு பறித்து வருகிறது.
கல்வியின் அனைத்து துறைகளிலும் பண ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மிகப்பெரிய ஜனநாயக போராட்டங்களை முன்னெடுப்போம். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் நீட் தேர்வு முறைக்கும், தேர்வு முறைகேடுகளுக்கும் எதிராக மாணவர்களை அணிதிரட்டுவோம்.
இந்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும், நீட் தேர்வை ரத்து செய்து, மாநிலங்களின் கல்வி உரிமையை பாதுகாக்கும் வகையில் மாநில அடிப்படையிலான மாணவர் சேர்க்கை முறையை அமல்படுத்த வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது.
மாநில தலைவர் - ஸ்டிபன் ராஜ்
மாநில செயலாளர்- பிரவீன் குமார்